Tuesday, September 19, 2017

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்-4 (தொடர்ச்சி)

இணைச்சீர்

  திருமண நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது ‘இணைச்சீர்’ என்பதாகும். ‘இணை உடுத்துதல்’ என்றும் கூறுவர். திருமணத்திற்கு இணையான சீர் என்றும், மணமகனுக்கும், மணமகன் சகோதரிக்கும் இணைப்பை உறுதிப்படுத்தும் சீர் என்றும், மணமகன், மணமகளோரு இணைவதற்குச் சகோதரி அனுமதியளிக்கும் சீர் என்றும் பலவாறாகக் கருதலாம்.

  சில இடங்களில் மணமகன் அமரும் இருக்கையில் சகோதரி முன்னர் வந்து அமர்ந்து கொள்வார். ‘உனக்குப் பிறக்கும் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாக உறுதியளித்தால் தான் உனக்கு இடம் கொடுப்பேன்’ என்பாள். மணமகன் உறுதியளித்தவுடன் எழுந்து மணமகன் அமர இடம் கொடுப்பாள்.

  திருமணப் பந்தலின் ஒரு பகுதியில் மணவறை போலவே அலங்கரிக்கப்பட்ட இடத்தில் மாப்பிள்ளை அலங்காரத்துடன் மணமகன் வந்து அமர்வார். மணமகனின் சகோதரிக்கு மணப்பென் போலவே அலங்காரம் செய்து அழைத்து வருவர். 

  பேழை ஒன்றைச் சகோதரி சுமந்து வருவாள். அதில், கூறைப்புடவை, வெற்றிலை பாக்கு, மஞ்சள், தேங்காய், பழம், கண்ணாடி, சீப்பு ஆகியன இருக்கும். இடக்கை பேழையைப் பிடித்துக் கொண்டிருக்க வலக்கையில் ஒரு செம்பு நீர் எடுத்து வருவாள். மணமகனையும், மண அறையையும் சுற்றி வந்து பேழையை மணமகனுக்கு வலப்புறம் வைப்பாள். பேழையில் உள்ள பொருள்களை அகற்றி அதனுள் சகோதரியை நிறுத்துவர்.  பேழையில் இருந்த கூறைப் புடவையில் ‘இணைப்பவுன்’ அல்லது தன் சக்திக்கு ஏற்றதை சகோதரி முடிந்து வைத்திருப்பாள்
.
  இணைச்சீர் மண அறையில் மண் கலசத்தின்மேல்  தேங்காய் வெற்றிலை பாக்கு வைத்து அதன் முன் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்திருப்பர். நவதானிய முளைப்பாரியும், அணையா விளக்கும் இருக்கும். பிள்ளையாருக்கு முன் தட்டில் அரிசி நிரப்பி அதன்மேல் வெற்றிலை பாக்கும், வெல்லமும் வைக்கப்பட்டிருக்கும். அருமைக்காரர் மணமகனின் சகோதரிக்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து அதனை மடியில் கட்டச் சொல்வார். பின் கூறைப்புடவையைக் கொசுவமாக மடித்து ஒரு முனையை மணமகன் கக்கத்திலும் மறுமுனையைச் சகோதரி கையிலும் கொடுப்பார்.


  அருமைக்காரர் மணமகனின் கையை அரிசியில் பதிய வைப்பார். விநாயகருக்குப் பூசை செய்து அரிசியை அள்ளி வெற்றிலையில் வைத்து நாவிதரிடம் கொடுத்து மங்கல வாழ்த்து இசைக்கக் கூறுவார். அருமைக்காரர் பிள்ளையார், மணமகன், சகோதரி ஆகியோருக்கு அருகு மணம் எடுத்துபின் பேழையைத் தலையில் வைத்துத் திருமண வீட்டுக்கு அனுப்பி வைப்பார்
.
 இணைச்சீர் பற்றி மங்கல வாழ்த்து விரிவாகக் கூறுகிறது. 

‘ஆடையாபரணம் அழகுபெறத் தான்பூண்டு
 கூறை மடித்து வைத்தார் குணமுள்ள தங்கையரும்
 பிறந்தவரைச் சுற்றிப் பேழை மூடி சுமந்து
 இந்திரனார் தங்கை இணையோங்க வந்த பின்பு
 பின்னே ஒரு தரம் பிறந்தவர்க்கு இணையோங்கி
மின்னனையார் முன்னே விநாயகர்க்கு இணையோங்கி’

 என்பது மங்கல வாழ்த்து.

  மணமகன்- சகோதரி தொடர்பு திருமணத்தால் குறையாது; சீர்வரிசையில் சம பங்கு அளிப்பேன் என்பதைக் குறிக்கவே இணைச் சீர் செய்யப்படுகிறது. பெண்ணுக்குச் சம உரிமை இல்லாத அந்தக் காலத்திலேயே கொங்கு வேளாளர்கள் பெண்களுக்குச் சம உரிமை கொடுத்தனர். ஆணிற்கு இணையாகப் பெண்ணுக்கும் உரிமையுண்டு என்பதை உணர்த்தும் சடங்கே – சட்ட விதியே இணைச்சீர் எனலாம்.

தாயுடன் உண்ணல்

  முன்பு இணைச்சீர் வரை அனைத்துச் சீர்களும் மணமகன் இல்லத்திலேயே நடைபெறும். பின் திருமணத்திற்கு வேண்டிய பொருள்களுடன் தன் உறவினர், குடிபடையுடன் மணமகன் மணமகள் இல்லம் செல்வார். இப்படிச் செல்வதைக் ‘கட்டிலேற்றிச் செல்லுதல்’ என்பர். அப்படிச் செல்லும் மணமகன் தாயுடன் ஒரே கலத்தில் உணவு உண்பார். மணமகளை மணம் முடிக்கச் செல்ல மணமகனுக்குத் தாயார் அனுமதியளித்து ‘பூங்கொடிக்கு மாலையிடப் போய்வா மகனே’ என்று அனுப்பி வைப்பாள். தாயார் ‘கட்டளை ஏற்றுச் செல்லல்’ என்பது கட்டிலேற்றிச் செல்லல்’ என மாறிவிட்டது. தாயோடு உண்ணலைத் ‘தயிர்ச் சோறு உண்ணல்’ என்றும், தாயார் கையால் உண்ணும் கடைசி உணவு என்றும் சிலர் கூறுவர்.

‘மாதாவுடனே மகனாரும் வந்திருந்து
போதவே பால்வார்த்துப் போசனமும் தான்அருந்தி’

என்று மங்கல வாழ்த்துக் கூறுகிறது.

கூடைச்சீர் அல்லது நாழியரிசிக் கூடை

   திருமாங்கல்யம், கூறைப்புடவை, பிற அணிகலங்கள், நெல், அரிசி, பழம், வெல்லம், தேங்காய், வெற்றிலைபாக்கு, விளக்கெண்ணெய், நெய், எலுமிச்சம்பழம், விறலி, மஞ்சள், சீப்பு, கண்ணாடி, பொட்டு, குங்குமம், திருநீறு, சந்தனம், பூக்கள் இவை போன்ற திருமணத்திற்கு இன்றியமையாமல் வேண்டப்படுகின்ற அனைத்துப் பொருள்களையும் ஒரு கூடையில் வைத்து மணமகன் இல்லத்தார் மணமகள் இல்லத்திற்கு நாவிதர் தலையில் வைத்து எடுத்து வருவர்.



 இவர்கள் அனைவரும் மணமகள் இல்லத்திற்கு அருகேயுள்ள பிள்ளையார் கோயிலில் தங்குவர். அவர்கள் கொண்டு வந்த திருமணப் பொருள்கள் அடங்கிய கூரைக்கு ‘நாழியரிசிக் கூடை’ என்று பெயர். மணமகள் வீட்டார் எதிர்கொண்டு வரவேற்பர்


‘நாட்டில் உள்ள சீர் சிறப்பு நாங்கள் கொண்டு வந்தோம் என்று நாழியரிசிக் கூடை நன்றாக முன் அனுப்பி

 என்று மங்கல வாழ்த்துக் கூறும்.

விடுதி வீடு

  மணமகன் வீட்டார் தங்கள் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார் தங்கள் உறவினருடன் சென்று அவர்களை வரவேற்று அழைத்து வருவர். முக்கியமானவர்கள் தாம்பூலதைப் பரிமாறிக் கொள்வர்.

  மணமகனையும் அவர்கள் சுற்றத் தாரையும் தனி வீட்டில் தங்க வைப்பர். அவ்வீட்டுக்கு விடுதி வீடு என்று பெயர்

. ‘ஊர்வலமாக ஒழுக்காய் வந்து விநோதம் பொருந்தும் விடுதியில் இறங்கினார்’

 என்பது மங்கல வாழ்த்துத் தொடராகும் மங்கல நாண் பூட்டும் திருமணத்தின் முக்கிய நிகழ்வுக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்.

பால் பழம் சாப்பிடுதல்


  முகூர்த்தத்திற்கு முன்னர் பெண்ணின் மாமன்மார்களையும், மாமன் முறையுடைய மற்றவர்களையும் அழைத்து புத்தாடை கொடுத்து விபூதி சந்தனம் அணியச் செய்து மாலை போட்டு மரியாதை செய்வர். மாமா முறையுடைய அனைவரும் இந்தத் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர் என்பதை இது குறிக்கும். சக்கரை கலந்த பாலில் பழம் போட்டுப் பிசைந்து கொடுப்பது பழைய வழக்கம்.

பட்டம் கட்டுதல்

  தாய் மாமன் மணப் பெண்ணுக்கு நெற்றிப் பட்டம் கட்டுவார். பட்டம் கட்டுதல் என்பது உரிமை கொடுப்பதைக் குறிக்கும் சொல்லாகும். இதுவரை குமரிப் பெண்ணாக இருந்தவள் இனி கணவனோடு சேர்ந்து வாழ்ந்து இல்லறம் நடத்துவதற்கு உரிமை உடையவள் என்பதைக் குறிக்கும்.

‘தாய் மாமனை அழைத்து சந்தோசம் ஓங்கிடவே 
பொட்டிட்டு பொன் முடித்துப் போதவே அலங்கரித்து
 பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர் தான் அறிய’

 என்பது மங்கல வாழ்த்துத் தொடர்.

   அரசர் அரசியர்க்குப் பட்டம் கட்டுவது போல் இல்வாழ்வு அரசிக்குச் சூட்டும் பட்டம் இதுவேயாகும்.

பெண்ணெடுத்தல்

  பால், பழம் சாப்பிட்டு பட்டம் கட்டியபின் மணமகளைப் பிள்ளையார் கோயிலுக்கு அழைத்துச் சென்று மணவறைக்கு அழைத்துச் செல்லும் உரிமை மாமன்மார்களுக்குரியது. 

  முன்பு மணப்பெண்ணை மாமன் தோளில் அமரச் செய்து தூக்கிக்கொண்டு செல்லுதல் வழக்கமாக இருந்தது. 

  பல சீர்கள் நின்று அல்லது குறைந்து விட்டது போல் இதுவும் நின்று விட்டது. இப்போது, ஒருவர் குடை பிடிக்க மற்றவர்கள் நடந்து மணமகளை அழைத்துச் செல்வர். மணவறையைச் சுற்றி வருவர். பெண்ணை மாப்பிள்ளைக்கு வலப்புறம் நிறுத்துவர்.

மாமன் எடுத்து மணவறையைச் சுற்றி வந்து
 மகிழ்ச்சி மீதூர வலமதாய் நிறுத்தி

 என்பது மங்கல வாழ்த்துத் தொடர்.

மணமேல் பணம்

  மணவறைக்கு மாப்பிள்ளை வரும் வரையில் அவர் அமரும் இடத்தில் முறை மாப்பிள்ளை அமர்வார். அவருக்கு மணமகள் வீட்டார் பணம் தருவர். மாமனுக்குப் பெண்ணைக் கொடுப்பதற்குப் பதிலாகப் பொன்னைக் கொடுப்பது என்பது இதன் அடையாளமாகும்.

  கொங்கு வேளாளர் திருமணச் சீர்களைத் தொகுத்து எழுதிய ஒரு நாளிதழ் இதற்குக் கொடுத்த தலைப்பு ‘முறை மாப்பிள்ளைக்கு முதல் மரியாதை’ என்பதாகும்
.
அருமைக்காரர்

  நிச்சயதார்த்தம், முகூர்த்தக்கால் போடுதல், வெற்றிலை கட்டல், இணைச்சீர், மாங்கல்ய தாரணம் செய்வித்தல் போன்ற முக்கியமான சீர்கள் அனைத்தையும் முன்னின்று செய்பவர் கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த அருமைக்காரர் ஆவார். முன்பு வைதிகத் திருமணம் கொங்கு வேளாளர் மரபில் இல்லை. சமூகப் பெரியவரே சீர்கள் செய்து மணம் செய்விப்பார்’.

  எல்லோரும் அருமை செய்ய முடியாது. அருமைக்காரர் ஆவதற்குரிய சீரை அவர் முதலில் செய்து கொள்ள வேண்டும். அருமை செய்து அருமைக்காரர் ஆக விரும்புபவர் மகப்பேறு உடையவராகவும், மனைவியுடன் வாழ்பவராகவும் இருக்க வேண்டும். அவர் தன்னுடைய மகன் அல்லது மகள் திருமணத்தில் அருமை செய்து கொள்ளலாம்.

  நெருங்கிய உறவினர்கட்கு முதலில் தன் அருமை செய்து கொள்வதை அறிவிக்க வேண்டும். பின்னர், தன் மக்கள் திருமணத்திற்கு மூன்று அருமைக்காரர்களை அழைக்க வேண்டும். பிறைமண் எடுத்து வர மூன்று அருமைக்காரர்களும் செல்ல வேண்டும். நீராடிப் புத்தாடை அணிந்து விநாயகரைத் தொழுது பின்னர் மாங்கல்யம் திருப்பூட்டும் போது மற்ற அருமைக்காரர்கள் அருமை செய்த பின் இவரும் அருமை செய்ய வேண்டும்

 . அப்பொழுதிலிருந்து அவர் அருமைக்காரர் என அழைக்கப் பெறுவார். அருமைக்காரர் மனைவியை ‘அருமைக்காரி’ என்பர். அவரை ‘அருமைப் பெரியவர்’ என மங்கல வாழ்த்துக் கூறும்.

  மற்ற சீர்களில் பங்கு பெறும் பெண்கள் பெரும்பாலும் எழுதிங்கள் சீர் செய்து கொண்டவர்களாகவும், சுமங்கலிகளாகவும், மக்கட்பேறு உடையவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் ‘எழுதிங்கள்காரிகள்’ என்றே அழைக்கப்பெறுவர்.

மண அறை

  கிழக்கு நோக்கி சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து மண மக்கள் அமரும் வண்ணம் அமைக்கப் பெற்றிருக்கும். பசுமையான தென்னங்கீற்றாலும், மாவிலைத் தோரணங்களாலும், மலர்களாலும் மணவறை அமைக்கப் பெற்றிருக்கும். மேல்புறம் மணமக்கள் அமர பலகை அல்லது இருக்கை போடப்பட்டிருக்கும். பிறை மண்ணால் பிரம்மஸ்தானம் அமைத்து பேய்க்கரும்பு நாட்டப்பட்டிருக்கும் பச்சை மூங்கில் நட்டு அரசிலை சுற்றப்பட்டிருக்கும்.

  இரண்டு கரகப்பானைகள் வைக்கப்பட்டிருக்கும். ஒன்றில் நீரும், மற்றொன்றில் நெல்லும் நிரம்பியிருக்கும் கரகப் பானைகள் மேல் மாவிலை, வெற்றிலை, தேங்காய் வைக்கப்பட்டிருக்கும். குத்து விளக்கு ஏற்றப்பட்டிருக்கும். ஆயிரப் பெருந்திரி ஏற்றப்பட்டிருக்கும். நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டிருக்கும். கை கோர்வைக்காக அரிசித் தட்டும் அதன்மீது வெற்றிலையும், வெல்லமும் வைக்கப்பட்டிருக்கும்.

  ஒரு தட்டில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம் பழம் வைக்கப்பட்டு அதன் மீது தாலி வைக்கப்பட்டிருக்கும். மஞ்சள் பிள்ளையார் வைக்கப்பட்டிருப்பார். அருகு மணம் எடுக்கப் பாலும் வெற்றிலையும் ஒரு புறம் இருக்கும்.

  மண அறையை மங்கல வாழ்த்து பின் வருமாறு வருணிக்கிறது.

மாந்துளிரும் பூங்கொத்தும் வண்ணமுள்ள பட்டாடை 
மேலான வெள்ளைப்பட்டு மேற்கட்டும் கட்டியுள்ள
 அருமையான பந்தலிலே பூவால் அலங்கரித்து
 நாற்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டு 
அம்மி வலமாக அரசாணி முன்பாக 
ஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாக 
சுத்தமுடன் கலம் விளக்கிச் சோறு, அரிசி, பால், பழமும் 
பக்தியுடன் அத்தனையும் பாரித்தார் மணவறையில்’

 என்பன மங்கல வாழ்த்துத் தொடர்கள்.

மணமக்கள் வருகை

  மணமகன் வரும்போது மணமகள் சகோதரி முறைப் பெண்கள் மணமகனுக்கு ஆலாத்தி எடுப்பர். மணமகன் மணவறையைச் சுற்றி வந்து அமர்வார். மணமகளை மாமன்மார் அழைத்து வந்து மாப்பிள்ளைக்கு வலப்பக்கம் அமர வைப்பர். மணமகன் அருகே மாப்பிள்ளைத் தோழரும், மணப்பெண் அருகே தோழியும் இருப்பர். எல்லோரையும் கும்பிட்டு மண அறையில் மணமக்கள் அமர்வர்.

புலவர் செ இராசு அவர்களின் கொங்கு வேளாளர் சீர்களும்,இலக்கியங்களும் என்னும் நூலிலிருந்து

 (தொடரும்)

No comments:

கொங்கு வேளாளர் குலங்கள்

(புலவர் செ.இராசு அவர்களின் நூலிலிருந்து }