வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும் நீதிவளம் படைத்துடைய நிதிவணிகர் தம்குலமும் சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர் கோதில்குலம் தனக்குநிகர் உண்டாகில் கூரிரே ! -ஏரெழுபது
Sunday, December 10, 2017
Thursday, November 16, 2017
Wednesday, October 25, 2017
Tuesday, October 10, 2017
கொங்கு வேளாளர் சீர்கள்-( எழுதிங்கள் சீர்).
எழுதிங்கள் சீர்
ஒரு பெண்ணின் மகனுககோ,மகளுக்கோ திருமணம் ஆகும் முன் தாய் வீட்டில் அல்லது தாய் வீட்டுச்செலவில் நடைபெறுவது எழுதிங்கள் சீர் .நல்ல நாள் பார்த்து அருமைக்காரரை அழைத்து மாலையில் முகூர்த்தக்கால் போடுவார்கள்.இந்நிகழ்வில் தொடர்ந்து சில அரிய சீர்கள் நடைபெறும்.
பொடச்சட்டி தூக்குதல்
ஒரு புதிய மண் பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் ஊற்றுவர். மண்பானை வாயிலில் குறுக்கும் நெடுக்குமாக மாங்குச்சிகளை வைப்பர்.அதன்மீது நீர்விட்டுப்பிசைந்த 5 படிதிணைமாவை,அம்மிக்குழவிபோல்உருவாக்கி, அதனை இரு கூறாகப் பிளந்து உள்ளே அச்சுவெல்லத்தை வைத்து மூடுவார்கள்.குச்சிகளின் மேல் மா உருண்டையை வைத்து மண்பானையை மூடுவர். இப்பானையைப் பெண்ணின் சகோதரர் தூக்கி அடுப்பில் வைப்பார். இதற்குப் பொடச்சட்டி தூக்குதல் என்று பெயர். பின்னர் அப்பானையை விடிய விடிய வேக வைப்பர் .திணை மா நன்றாக வேகும் வரை அடுப்பை எரிக்க வேண்டும்
.
குழவி எடுத்தல்
பச்சைப் பந்தலின் கீழ் எழுதிங்கள் சீர் செய்து கொள்ளும் பெண்ணை நீராட்டுவர்.அருகில் சுவர் ஓரம் மர உரல் ஒன்று வைக்கப்பட்டிருக்கும்.உரலின் பின் சீர்ப்பென்னை நிறுத்துவர்.பெண்ணின் சகோதரர் இலந்தை முல்லைக் குடை போல் தலைக்கு மேல் பிடித்து நிற்பார்.
நாவிதன் உழுபடைக் கொழுவைப் பழுக்கக் காய வைத்துப் பெண்ணின் அருகில் கொண்டு வந்து,அதன் மீது மோரை ஊற்றுவார்.அப்போது சட சட என்று சத்தம் வரும்.அப்போது சீர்ப் பெண் மர உரலைக் காலால் உதைத்துத் தள்ளிவிட்டு வீட்டினுள் செல்வாள்.அப்பெண்ணின் கணவனின் சகோதரி உரலில் வைக்கப்பட்டுள்ள குலவிக்கல்லை எடுத்துக்கொண்டு போய் சீர்ப்பெண்ணின் மடியில் வைப்பார்.இதற்கு குழவிஎடுத்தல் என்று பெயர்.
பின் அப்பெண்ணிற்கு புளிய ஆக்கை போட்டுத் தாண்டச்செய்து நீராட்டுவர்.விரதம் இருந்த சீர்ப் பெண், விரதம் முடிப்பாள்.பின் எல்லோருக்கும் விருந்தளிக்கப்படும்
கோதை மாவு பிளத்தல்
விடியுமுன் அதிகாலையில் புடச்சட்டி மாவை எடுத்து வாயிற்படிமீது வைப்பர். அருமைக்காரியும் சீர்ப்பெண்னும் கோடரியால் மா உருண்டையை இரு கூறாகப் பிளப்பர்.மா நடுவில் வைக்கப்பட்ட வெல்லம் கரையாமல் இருந்தால் குடும்பத்திற்கு நல்லது என்பர்.இதை கோதைமாவு பிளத்தல் என்பர்
மிடாச்சோறு தோண்டுதல்
சீர்ப் பெண்ணையும் அவள் கணவனையும் மணவறையில் அமரவைத்து மாலையிட்டு, பொட்டு வைத்து அருமைக்காரர் அருகுமணம் செய்வார்.பின் செஞ்சோறு அஞ்சடை சுற்றி எறிவர் ஆரத்தி எடுத்து நீர் விளாவுவார். சீர்ப்பெண் ஒரு மண்பானையில் சோறாக்கிக் கரண்டியால் எல்லோருக்கும் போட்டுத் தானும் உண்பாள்.இச்சீர் மிடாச்சோறு தோண்டுதல் என்பர். பின் சீர்ப்பெண் சீர்க்காரி ஆவாள். எல்லா மங்கலச் சீரிலும் பங்கு பெறும் தகுதியைப் பெறுவாள்.
சீர்க்கூடை கொடுத்தல்
இந்தச் சீரின் எல்லாச் செலவுகளையும் பெண்ணின் தாய் வீட்டாரே ஏற்றுக்கொள்வர்.சீர்ப்பெண் வீட்டார் அனைவருக்கும் புத்தாடை எடுத்துக் கொடுப்பர். நகைகள் அளிப்பதும் உண்டு.பெண்ணை அவள் வீட்டுக்கு அனுப்பும்போது சீர்க்கூடையில் அரிசி,பருப்பு,வெல்லம், தேங்காய்,பழம்,வெற்றிலை,பாக்கு, எலுமிச்சம்பழம் வைத்து அனுப்புவர்.பிள்ளையார் கோவிலில் வழிபட்ட பின்,சீர்ப்பெண்ணை அவளது வீட்டிற்கு அனுப்பி வைப்பர். . . . .
Sunday, September 24, 2017
கொங்கு வேளாளர் திருமண சீர்கள்-6 (தொடர்ச்சி)
விரல் கோர்வை
திருநாண் பூட்டுதல் முடிந்த பின் மணமகனது வலதுகைச் சுண்டு விரலையும், மணமகளது இடதுகைச் சுண்டு விரலையும் இணைத்து இருவர் கையையும் பட்டுத் துணியால் சுற்றி மண அறையைச் சுற்றி வரச் செய்வர். இப்போது இணையும் கைகள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். சிலப்பதிகாரம் ‘காதலர்ப் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்’ என்று கூறும். சுண்டு விரலில் தான் இதய நாடி ஓடுகிறது என்பர். இரு இதயங்களும் ஒன்றுபட்டன என்பது இதன் பொருள். பின் மண மக்கள் மாலை மாற்றிக் கொள்வர்.
நலங்கிடல்
பிற சமூகம் போல் நலங்குப் பாடல்கள் பாடுவது கொங்கு வேளாளர் வழக்கம் இல்லை. வெற்றிலையில் குங்குமத்தை வைத்துக் குழைத்து மணமகன் மணமகள் ஒருவர் பிறருக்குப் பொட்டு வைப்பது தான் நலங்கிடல் எனப்படுகிறது. மங்கல வாழ்த்து
‘செங்கையினாலே சிகப்பிட்டு இருவருக்கும்’
என்று கூறும்.
குலம் கோதுதல்
இன்ன குலத்தைச் சேர்ந்த இன்னாருடைய பேரன் இன்னாரது மகன் இன்ன குலத்தை சேர்ந்த இன்னாரது பேத்தி இன்னாரது மகளை உங்கள் முன்னிலையில் சூரியர் சந்திரர் சாட்சியாக முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் சாட்சியாக மணம் முடித்துக் கொண்டனர் என்பதே குலம் கோதுதல் ஆகும். குலம் ஓதுதல்தான் – கோதுதலாக மாறிவிட்டது என்பர்.
அம்மி மிதித்து அருந்ததி காட்டல்
அம்மியைக் கழுவிச் சுத்தம் செய்து விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு வைத்திருப்பர். மணமகள் தன் வலது பாதக் கட்டை விரலை அம்மியில் வைப்பாள். பின் சாலில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் தன் முகத்தைப் பார்ப்பாள். அம்மி போல் உறுதியாகக் கற்புத் தன்மையைக் காப்பேன் என்பது இதன் பொருள்.
அருந்ததி சப்தரிஷிகளில் ஒருவராகிய வசிட்டர் மனைவி. மும்மூர்த்திகளும் அவள் கற்புத் தன்மையைச் சோதித்தும் நிலை குலையாது இருந்தவள். தன் கணவன் ஐயப்பட நட்சத்திர பதம் பெற்று சப்தரிஷி மணடலத்தின் இடையில் உள்ள வசிட்ட நட்சத்திரத்தின் அருகிலேயே இருக்கும் பேறு பெற்றாள். அருந்ததி பார்ப்பது என் கணவனைப் பிரியாமல் இருப்பேன் என்று மணமகள் உறுதி ஏற்பதாகும். அருந்ததியை வடமீன் என்பர். எப்பொழுதும் அது வடக்கிலேயே இருக்கும். துருவ நட்சித்திரம் என்னும் வடமீன் கடல்பயண மாலுமிகட்கு வழிகாட்டியாக இருப்பது.
‘வடமீன்போல் தொழுதேத்தும் வயங்கிய கற்பினாள்’
‘வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை’
‘அம்கண் உலகின் அருந்ததி அன்னாளை’
எனக் கலித்தொகை, புறநானூறு, சிலப்பதிகாரம் கூறுகிறது.
அருகு மணம்
மண அறையில் மஞ்சள், சுண்ணாம்பு கலந்த நீரில் உள்ள வெற்றிலையையும், அருகம்புல்லையும் எடுத்துக் கிள்ளி அருமைக்காரர் மணமகனுக்கும், மணமகளுக்கும் பாதம், தோள், தலை இவற்றில் கையை நிறுத்தி மூன்று முறை ஆராதனை செய்வார். இதற்கு ‘அருகு மணம்’ என்று பெயர்.
பரியம் செலுத்தல்
மணமகன் சார்பில் மணமகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு தொகை பரியம் ஆகும். 37 1/2 ரூபாய், 47 1/2 ரூபாய் என ஊருக்கு ஊர் பலவாறு வேறுபடும். சில இடங்களில் பணத்தோடு அரிசியும் கொடுக்கப்படும். மணமகளுக்குப் பொருள் கொடுத்தே முன்பு திருமணம் நடைபெற்றது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
மஞ்சள் துணியில் கட்டிக் கொடுக்கப்படும் பணத்தை முக்காலி வேல் வைத்து எண்ணிப் பார்த்து எவ்வளவு என்று அறிவித்து மணமகள் வீட்டுச் சீர்க்காரப் பெண்ணிடம் இதைக் கொடுக்க அவர் வாங்கிச் சென்று தண்ணீர் நிறைந்துள்ள சாலின் மீது வைத்து மணமகள் வீட்டாரிடம் கொடுப்பர்.
பெண்ணை இவ்வளவு நாள் செலவு செய்து வளர்த்தமைக்காகப் பெண் வீட்டாருக்குக் கொடுக்கும் தொகை என்றும், மணமகளைத் தொடுவதற்காகக் கொடுக்கும் ஸ்பரிசத் தொகை ‘பரியம்’ என மாறி விட்டதென்றும் கூறுவர். அகப்பொருள் இலக்கியங்களில் இது ‘முலைவிலை’ என்று கூறப்படுகிறது. ‘பரிசு’ என்றும் கூறலாம்.
பாத அணி அணிதல்
மணமக்கள் மண வீட்டின் வாயிலில் வந்து பண்ணையத்து மாதிகன் எனக் கூறப்படும் மாதாரி அளிக்கும் பாத அணிகளை (செருப்பு) அணிவர். அவருக்கு மனம் குளிரப் பணமும், பொருள்களும் கொடுப்பர். பாத அணிகள் கடையில் வாங்கினாலும் அவரிடம் கொடுத்தே அணிவர். கடை நிலையில் உள்ளாரும் திருமணத்தில் பங்கு பெற வேண்டும் என்பது இதன் பொருள்.
புலவர் பால் சாப்பிடுதல்
காணிப்புலவருக்கு விருந்தளித்து அதன் பின் மணவீட்டார் தாங்கள் உண்ணும் வெங்கலவட்டிலில் பாலும், பழமும் கலந்து கொடுத்து உண்ணச் செய்வர். புலவருகக்கு தலை, தோள், இடுப்புக்கு 3 ஆடை அளிப்பர். புலவர் பால் சாப்பிடாத வீடு மதிப்புக் குறைந்த வீடாகக் கருதப்படும்
.
கரகம் இறக்குதல்
இணைச்சீர் நடைபெற்ற இடத்திலும், மண அறையிலும் இருந்த கரகங்களை எடுத்து மூடியைத் திறந்து தாம்பூலம் வைத்து மணப் பெண் வீட்டுக்குக் கொண்டு செல்வர். தண்ணீரைக் கூறைமேல் ஊற்றுவர். நெல் உள்ள கரகத்தை உறியில் வைப்பர்.
பின் மணமக்களின் கங்கணங்கள் அவிழ்க்கப் பெறும் அதைக் கூறைமேல் எறிவர் அல்லது பாலில் போடுவர்.
பந்தல் களறிச் செலவு
திருமண ஏற்பாடுகளில் கலந்து கொண்ட அத்துணை குடிபடைகட்கும் தொழிலாளிகட்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப உரிய தொகையை ஒவ்வொருவராக அழைத்து அருமைக்காரரே மணப்பந்தலில் வழங்குவார். பந்தல் போட்டவர், மேளகாரர், நாவிதர், பண்டாரம், பூசாரி, வண்ணார், பறையர், சக்கிலி, மாலைக்காரர், குயவர், ஆசாரி, புலவர், மாணிக்கத்தி என எல்லோருக்கும் பணம் வழங்கப்படும். இதனோடு ஊர்ப்பணமும் வழங்கப் பெறும். அது பழைய கால் ரூபாய் (25 பைசா) தான். உரிமையோடு அதைப் பெறுவர்.
சட்டுவச்சாதம் கலக்கல்
மணமகனுக்கு மணமகள் அளிக்கும் முதல் உணவாகும். கையில் போடாமல் இரும்புக் கரண்டி, சட்டுவம் போன்றதாலும் (தோசை திருப்பி போன்றது) அன்னக் கரண்டியாலும் போடுவதால் இப்பெயர் பெற்றது.
பின்னர் மணமகன் விட்டுக்குப் பெண்ணை முதலில் மணமகன் வீட்டார் அழைத்துச் செல்வர். பெண்ணுடன் அவள் தம்பி செல்வர். பின் பெண் கூட்டி வர மணமகள் வீட்டார் செல்வர். மாலையில் பெண் வீட்டுப் பிள்ளையார் கோயில் புதுப்பாத்திரத்தில் மணப்பெண் பொங்கல் வைப்பார். இது ‘மடைக்கலப் பானைப் பொங்கல்’ எனப்படும்.
சம்பந்தம் கலக்கல்
திருமணக் கூட்டத்தில் நெருங்கிய உணவினர்களை அறிமுகம் செய்து வைத்து நேரம் இருக்காது. திருமணம் முடிந்து இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கட்கு மட்டும் விருந்தளிக்கப்படும். இது ‘சம்பந்தம் கலக்குதல்’ எனப்படும்.
தொடர் நிகழ்வுகள்
குலதெய்வக் கோயில்கட்கும், உள்ளூர் கோயில்கட்கும் ‘கல்யாணப்படி’ என்ற பெயரில் மணமக்களோடு சென்று பூசை செய்து வழிபடுவர். பெண்ணெடுக்கி மாமன்மார்கட்கு விருந்து வைக்க அவர்கள் இல்லங்கட்குச் செல்வர். இணைச்சீர் செய்த சகோதரிக்கு இல்லம் சென்று சிறப்புச் செய்வர். பின் மணமகனுக்கு மணமகள் வீட்டிலும், மணமகளுக்கு மணமகன் வீட்டிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவர்.
சாந்தி முகூர்த்தம் என்பதைப் பிறருக்கு அறிவித்து விமரிசையாகச் செய்வது கொங்கு வேளாளர் வழக்கம் இல்லை.
பல சமூகத்தாரும் திருமணச் சீர்களில் பங்கு பெறுவது கொங்கு வேளாளர் சமூக ஒற்றுமைக்கும், பல குடிமக்களை அவர்கள் கொடை கொடுத்துப் பாதுகாக்கும் தன்மைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
திருமண வீட்டில் முன்பு மங்கல வாழ்த்துக்குப் பின் புலவரால் கம்பர் பாடிய வாழி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் ஆகியவை படிக்கப்பட்டது. கொங்கு வேளாளர் திருமணங்கள் இலக்கிய மேடையாகத் திகழ்ந்தன.
கொங்கு வேளாளர் திருமண இல்லங்களில் சிறப்பிக்கப்பெறும் பதினெட்டுக் குடியினர்.
தொண்டைமண் டலவரிசை நாலாறு கோட்டமும்
சோழநாள் முதலாகவே
சொல்பெரிய நாவிதன் குயவன் வண்ணான் ஓலை
சொன்னபடி எழுதும்உவச்சன்
கண்டதொரு கண்ணாளர் ஐவர் வாணியர் மூவர்
கந்தமணி மாலைகாரன்
கலைமீது சரடோட்டு பாணணும் தலைக்குளம்
காவலாகிய வலைஞனும்
பண்டுமுதலாய் ஊரார்க்குக் கண்டுமே உரைத்திடும்
பறையனொடு பள்ளனுடனே
பதினெண்பேர் மணவறையில் மாகாணம் அளவுபோய்
பணிசெய்து பகரும்முறையால்
கொண்டிடும் பரிவட்டம் கட்டியே மிகவாகை
கூறும் வேளாளருக்குக்
குலவயம் தன்னிலே கச்சி ஏகம்பர்தன்
குமுதத்தில் இட்டவரியே.
-பழம்பாடல்
❂ ❂ ❂ ❂ ❂ ❂ ❂ ❂ ❂ ❂
.
Friday, September 22, 2017
கொங்கு வேளாளர் திருமண சீர்கள்-5 (தொடர்ச்சி)
பாத பூசை
மணமகனும், மணமகளும்
தங்கள் பெற்றோர்கட்குப் பாத பூசை செய்வர். பாதங்களை நீர் தெளித்துக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு வழிபடுவர். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பது தமிழ் நாட்டுப் பழமொழியாகும்.
மணமகனின் வலது கைமேல் மணப்பெண்ணின் இடது கையை வைத்து ஒரு பணம் வைத்துப் பெண்ணின் பெற்றோர் தன் உறவினர்கள் முன்னிலையில் தன் கையால் தண்ணீர் விட்டுத் தாரை வார்ப்பார்கள். பெண் வீட்டார் கொடுத்தோம் என்று சொல்ல மணமகன் வீட்டார் கொண்டோம் என்று சொல்லுவார்கள். இனி மணமகள் பாதுகாப்பு மணமகனுடையதே என்பதை அறிவிக்க நடக்கும் சடங்காகும். தாரை வார்க்கும் நீரில் பொன் வைப்பது வழக்கம்.
‘தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன் கொடுத்து’
என்கிறது மங்கல வாழ்த்து.
திருப்பூட்டுதல்
தாலி வைக்கப்பட்டிருக்கும் தட்டின் ஓரத்தில் சூடம் கொளுத்தப்படும். அருமைக்காரர் விநாயகரை வணங்கித் தட்டை வாங்கி மணமக்களை வணங்கச் செய்து அந்தத் தட்டைப் பண்டாரத்திடம் கொடுப்பார். பண்டாரம் அவையில் உள்ள அனைவருக்கும் தட்டைக் காட்டுவார் எல்லோரும் வணங்கி ஆசீர்வதிப்பர். முகூர்த்த வேளை நெருங்கினால் தட்டை மணவறை அருகே உயர்த்திக் காட்ட எல்லோரும் இருந்த இடத்திலிருந்தே ஆசீர்வதிப்பர்.
மணவறையில் திருமண நிகழ்ச்சி நடப்பதைக் ‘கைதாரை செய்தல்’ என மங்கல வாழ்த்து அழைக்கிறது. தாலி அணிதலை திருநாண் பூட்டல் என்பர்.
பண்டாரத்திடம் உள்ள தட்டிலிருந்து அருமைக்காரர் தாலியை எடுப்பார். எடுத்து கிழக்கு நோக்கி நின்று சூரியனை அல்லது சூரியன் உள்ள திசையில், வணங்குவார். பெண்ணைக் கிழக்கு முகமாகவும், மணமகனை மேற்கு முகமாகவும் நிறுத்தி மாங்கல்ய தாரணம் செய்விப்பார். மாங்கல்யத்திற்குச் சந்தனம் குங்குமம் வைக்கப்படும்.
மாங்கல்யம் திருப்பூட்டும்போது சகல வாத்தியம் முழங்கும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அட்சதை எனப்படும் மஞ்சள் தோய்ந்த அரிசியை வாழ்த்துக் கூறி மணமக்கள் மீது போடுவர். (அட்சதையை மணமக்கள் அருகில் சென்று அவர்கள் மீது படும்படி போடுவதே முறையானதாகும்).
கைகோர்வையும்,மங்கலவாழ்த்தும்
திருப்பூட்டுதல்,மாங்கல்ய தாரணம் என்னும் மங்கல அணி அணிவித்தபின் மண மேடையில் மாப்பிள்ளையின் எதிரில் முக்காலி போடப்பட்டு அதன்மீது ஒரு தட்டை நிறை அரிசியுடன் வைப்பர்.அரிசியின் மேல் வெற்றிலை பாக்கும் அதன்மீது ஒரு அச்சு வெல்லமும் வைக்கப்படும்.மணப்பெண்ணின் சகோதரரையோ, சகோதரர் இல்லாவிடில் சித்தப்பா-பெரியப்பா மகனையோ மாப்பிள்ளையின் முன் அமரச்செய்வர்.அவருக்கு சிறு மாலை போடப்படும்
அருமைக்காரர் மாப்பிள்ளை கையையும்,மணப்பெண்ணின் சகோதரர் கையையும் கோர்க்கச்செய்து அரிசியினுள் பதிய வைப்பர்.அருமைக்காரர் பிள்ளையாரை வணங்கி வெற்றிலை பாக்குக்கொடுத்து குடிமகனாகிய மங்கலனை மங்கலவாழ்த்து இசைக்கக்கூறுவர்
குடிமகன் அரிசித் தட்டுக்கு எதிரில் மணமகனுக்கும் மணப்பெண்ணின் சகோதரருக்கும் இடையில் நின்று தட்டில் உள்ள அரிசியை எடுத்துத் தன கையில் உள்ள வெற்றிலையில் வைத்துக்கொண்டு மங்கலவாழ்த்தை விநாயகர் வணக்கத்துடன் இசைக்கத் தொடங்குவார்.ஐந்து அல்லது ஆறு வரிகள் இசைத்து முடித்தபின் இசைப்பதை நிறுத்திக் கையில் உள்ள அரிசியில் சிறிதை எடுத்து தட்டில் உள்ள அரிசியில் போடுவார்.
அப்போது எல்லா வாத்தியமும் அடங்கி குடிமகன் இசைப்பதை நிறுத்தும்போது மட்டுமே மத்தளத்தில் ஒரு தட்டு தட்டுவர்.மங்கலவாழ்த்து முடிந்தபின் சகல வாத்தியமும் முழங்கும்.
மங்கல வாழ்த்து
காப்பு வெண்பா
நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே – சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு.
அகவல்பா
மணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்குக்
குணம் பொருந்திய குடிமகனை அழைத்துத்
அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர்
திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக்
கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்
சந்திர சூரியர் தானவர் வானவர்
முந்திய தேவர் மூவருங் காத்திட
நற்கலி யாணம் நடந்திடும் சீர்தனில்
தப்பிதம் இல்லாமல் சரசுவதி காப்பாய்!
சீரிய தினைமா தேனுடன் கனிமா
பாரிய கதலிப் பழமுடன் இளநீர்
சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும் (10)
மிக்கதோர் கரும்பு விதவிதக் கிழங்கு
எள்அவல் நெற்பொரி இனித்த பாகுடன்
பொங்கல் சாதம் பொரிகறி முதலாய்
செங்கை யினாலே திரட்டிப் பிசைந்து
ஆரமுது அருந்தும் அழகு சிறந்த
பேழை வயிற்றுப் பெருமதக் களிறே
அடியேன் சொல்லை அவனியில் குறித்துக்
கடுகியே வந்தென் கருத்தினில் நின்று
நினைத்த தெல்லாம் நீயே முடித்து
மனத்துயர் தீர்ப்பாய் மதகரி சரணம்! (20)
மங்கல வாழ்த்தை மகிழ்ச்சியாய் ஓத
என்குரு நாதன் இணையடி போற்றி
கிரேதா திரேதா துவாபர கலியுகம்
செம்பொன் மகுடம் சேரன் சோழன்
பைம்பொன் மாமுடிப் பாண்டியன் என்னும்
மூன்று மன்னர் நாட்டை ஆள்கையில்
கருவுரு வாகித் திருவதி அவள்புகழ்
சிறந்த மானிடம் தாயது கருப்பம்
வாழ்வது பொருந்திச் சிறந்திடுங் காலம்
இந்திரன் தன்னால் இங்குவந்த நாளில் (30)
பக்குவம் ஆகிப் பருவங் கொண்டு
திக்கில் உள்ளோர் சிலருங் கூடி
வேதியன் பக்கமே விரைவுடன் சென்று
சோதிடனை அழைத்துச் சாத்திரங் கேட்டு
இந்த மாப்பிள்ளை பேர்தனைக் கூறி
இந்தப் பெண்ணின் பேர்தனைச் சொல்லி
இருவர் பேரையும் இராசியில் கேட்டுக்
கைத்தலம் ஓடிய இரேகைப் பொருத்தம்
ஒன்பது பொருத்தம் உண்டெனப் பார்த்துத்
தாலிப் பொருத்தம் தவறாமல் கேட்டு
வாசல் கௌலி வலிதென நிமித்தம் (40)
தெளிவுடன் கேட்டுச் சிறியோர் பெரியோர்
குறிப்புச் சொல்லும் குறிப்புரை கேட்டு
உத்தம பாக்கியம் தச்சனைக் கேட்டுப்
பொருந்தி இருத்தலால் பூரித்து மகிழ்ந்து
சிலபேர் உடனே சீக்கிரம் புறப்பட்டு
வெண்கல முரசம் வீதியில் கொட்டத்
தங்க நகரி தானலங் கரித்து
முற்றமும் மனையும் முத்துகள் பரப்பிச்
சித்திரக் கூடம் சிறக்க விளக்கி
உரியவர் வந்தார் உன்மகளுக் கென்று (50)
பிரியமுடன் வெற்றிலை மடிதனில் கட்டி
நாளது குறித்து நல்விருந்து உண்டு
பூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்து
வாழ்வது மனைக்கு மனமகிழ வந்துமே
கற்றோர் புலவர் கணக்கரை அழைத்துத்
தேம்பனை யோலை சிறக்கவே வாரித்
திசைதிசை எங்கும் தென்னவரை அனுப்பிக்
கலியாண நாளைக் கணித்துஅறி வித்தார்
பாங்குடன் முகூர்த்தப் பாலக்கால் நாட்டித்
தென்னம் குலையும் தேமாங் கொத்தும் (60)
பந்தல்கள் எங்கும் பரிவுடன் தூக்கி
வாழை கமுகு வளர்கூந் தற்பனை
மாவிலைத் தோரணம் மகரத் தோரணம்
சோலை இலையால் தோரணங் கட்டி
மூத்தோர் வந்து மொழுகி வழித்துப்
பார்க்குமிடம் எங்கும் பால்தனைத் தெளித்துப்
பெண்டுகள் வழங்கும் பெரிய கலத்தைக்
கொண்டு வந்ததனைக் குணமுடன் விளக்கி
நேரிய சம்பா அரிசியை நிறைத்துப்
பாரிய வெல்லம் பாக்கு வெள்ளிலை (70)
சீருடன் நெய்யும் தேங்காய் பழமும்
வாரியே வைத்து வரிசை குறையாமல்
முறைமை யதாக முக்காலி மேல்வைத்து
தெள்ளிய பாலால் திருமுகம் துடைத்தபின்
அரும்பிய மீசையை அழகுற ஒதுக்கி
எழிலுடை கூந்தலுக்கு எண்ணெய் தனையிட்டுக்
குணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்து
ஏழு தீர்த்தம் இசைந்திடும் நீரை (80)
மேள முடனே விளாவியே வார்த்துச்
செந்நெல் சோற்றால் சீக்கடை கழித்து
வண்ணப் பட்டுடை வத்திரந் தன்னை
நெருங்கக் கொய்து நேர்த்தியாய் உடுத்தி
மன்னவர் முன்னே வந்தவ ருடனே
வாசல் கிளறி மதிப்புடன் கூட்டிச்
சாணங் கொண்டு தரைதனை மெழுகிக்
கணபதி தன்னைக் கருத்துடன் நாட்டி
அருகது சூடி அருள்பொழிந் திடவே
நிரம்பி யதாக நிறைநாழி வைத்து (90)
வெற்றிலை பழமும் விருப்புடன் வைத்து
அலைகடல் அமுதம் அவனியின் நீரும்
குழவிக்குக் கங்கணம் குணமுடன் தரித்து
முளரி மெச்சிட முகமது விளங்கிடக்
களரி வைத்துக் காப்பது கட்டிக்
குப்பாரி கொட்டிக் குலதேவதை அழைத்துச்
செப்பமுடன் மன்னவற்குத் திருநீறு காப்பணிந்து
சாந்து புனுகு சவ்வாது பன்னீரும்
சேர்த்துச் சந்தனம் சிறக்கவே பூசிக்
கொத்தரளி கொடியரளி கோத்தெடுத்த நல்லரளி (100)
முல்லை இருவாச்சி முனைமுறியாச் செண்பகப்பூ
நாரும் கொழுந்தும் நந்தியா வட்டமும்
வேரும் கொழுந்தும் வில்வ பத்திரமும்
மருவும் மரிக்கொழுந்தும் வாடாத புட்பங்களும்
புன்னை கொன்னை பூக்கள் எல்லாம்
கொண்டு வந்து கொண்டை மாலை
தண்டை மாலை சோபனச் சுடர்மாலை
ஆடை ஆபரணம் அலங்கிருதம் மிகச்செய்து
திட்டமுடன் பேழைதனில் சோறுநிறை நாழிவைத்து
நட்டுமெட்டுத் தான்முழங்க நாட்டார்தன் நாட்டுக்கல்லை (110)
நன்றாய் வலம்வந்து நலமாக நிற்கையிலே
செஞ்சோறு ஐந்துஅடை சிரமதைச் சுற்றித்
திட்டி கழித்துச் சிவசூரி யனைத்தொழுது
அட்டியெங்கும் செய்யாமல் அழகுமனைக்கு வந்து
மணவறை அலங்கரித்து மன்னவரைத் தானமர்த்தி
இணையான தங்கையரை ஏந்திழையைத் தானழைத்துச்
மந்தாரை மல்லிகை மருக்கொழுந்து மாலையிட்டு
ஆடை ஆபரணம் அழகுறத் தான்பூண்டு
கூறை மடித்துவைத்துக் குணமுள்ள மங்கையவள்
பேழைமூடி தான்சுமந்து பிறந்தவனைச் சுற்றிவந்து (120)
பேழைதனை இறக்கிவைத்துப் பிறந்தவளை அதில்நிறுத்தி
கூறைச்சேலைத் தலைப்பைக் கொப்பனையாள் கைப்பிடித்து
மாப்பிள்ளை கக்கத்தில் மறுமுனையைத் தான்கொடுத்து
அருமைப் பெரியவர் அழகுமாப் பிள்ளைகையை
அரிசியில் பதியம்வைத்து ஐங்கரனைப் பூசித்து
மங்கல வாழ்த்துக்கூற மணவறையில் குடிமகனுக்குச்
செங்கையால் அரிசியள்ளிச் சிறக்கக் கொடுத்திடுவார்
வேழ முகத்து விநாயகர் தாள்பணிந்து
சந்திரரும் சூரியரும் சபையோர்கள் தானறிய
இந்திரனார் தங்கை இணையோங்க வந்தபின்பு (130)
அடைக்காயும் வெற்றிலையும் அடிமடியிற் கட்டியபின்
முன்னர் ஒருதரம் விநாயகருக்கு இணைநோக்கிப்
பின்னர் ஒருதரம் பிறந்தவர்க்கு இணைநோக்கி
இந்திரனார் தங்கை இணையோங்கி நின்றபின்பு
தேங்காய் முகூர்த்தமிட்டுச் செல்ல விநாயகனைப்
பாங்காய்க் கைதொழுது பாரிகொள்ளப் போறமென்று
மாதா வுடனே மகனாரும் வந்திறங்கிப்
போதவே பால்வார்த்துப் போசனமும் தான்அருந்தித்
தாயாருடை பாதம் தலைகுனிந்து தண்டனிடப்
போய்வா மகனேஎன்றார் பூங்கொடிக்கு மாலையிடப் (140)
பயணமென்று முரசுகொட்டப் பாரிலுள்ள மன்னவர்கள்
மதகரி அலங்கரித்து மன்னவர்கள் ஏறிவரத்
தந்தை யானவர் தண்டிகை மேல்வரத்
தமையன் ஆனவர் யானையின் மேல்வர
நாடியே வந்தவர்கள் நட்சத்திரம் போல்வரத்
தேடியே வந்தவர்கள் தேரரசர் போல்வரப்
பேரணி முழங்க பெரிய நகாரடிக்கப்
பூமிதான் அதிர புல்லாங்குழல் ஊத
எக்காளம் சின்னம் இடிமுரசு பெருமேளம்
கைத்தாளம் பம்பை கனதப்புத் தான்முழங்கச் (150)
சேகண்டி திமிர்தாளம் சிறுதவண்டை ஓசையெழத்
துத்தாரி நாகசுரம் சோடிகொம்பு தானூத
வலம்புரிச் சங்கநாதம் வகையாய் ஊதிவர
உருமேளம் பறைமேளம் உரம்பை திடும்படிக்கப்
பலபல விதமான பக்கவாத்திய முழங்கப்
பல்லக்கு முன்னடக்கப் பரிசுகள் பறந்துவர
வெள்ளைக்குடை வெண்கவரி வீதியில் வீசிவரச்
சுருட்டி சூரியவாணம் தீவட்டி முன்னடக்க
இடக்கை வலக்கை இனத்தார்கள் சூழ்ந்துவரக்
குதிரை மீதிவர்ந்து குணமுள்ள மாப்பிள்ளை (160)
சேனைகள் முன்னே சிறந்து முன்னடக்கக்
கட்டியங்கள் கூறிக் கவிவாணர் பாடிவர
நாட்டியங்கள் ஆடிவந்தாள் நல்ல தேவடியாள்
பாகமாஞ் சீலைப் பந்தம் பிடித்திட
மேகவண்ணச் சேலை மின்னல்போல் பொன்னிலங்க
அடியாள் ஆயிரம்பேர் ஆலத்தி ஏந்திவரப்
பெண்ணு வீட்டார் பிரியமுடன் எதிர்வந்து
மன்னவர் தங்களை வாருங்கள் என்றழைத்து
எதிர்ப்பந் தத்துடன் எதிர்மேளம் முழங்க
உடந்தையாய் அழைக்க ஒருமன தாகிப் (170)
பந்து சனங்கள் பண்புமித் திரர்வர
வந்தனை ஆன வாத்தியம் ஒலிக்கப்
பட்டன் புலவன் பண்பாடி தக்கைகொட்டி
திட்டமாஞ் சோபனஞ் செப்பிமுன் னேவர
அரம்பை மேனகை அணிமிகும் திலோத்தமை
திறம்பெறும் ஊர்வசித் தெரிவையர்க்கு ஒப்பாய்
வண்மைசேர் கூத்தி வகைபெற நின்று
நன்மைசேர் பரத நாட்டியம் ஆடிட
வெகுசனத் துடனே விடுதியில் இறங்கி
வாழ்வரசி மங்கைக்கு வரிசை அனுப்பும்என்றார் (180)
நாழியரசிக் கூடை நன்றாக முன்னனுப்பிப்
பொன்பூட்டப் போகிறவர் பேடை மயிலிக்கு
நல்ல முகூர்த்தம் நலமுடன் தான்பார்த்துப்
பெட்டிகளும் பேழைகளும் பொன்னும் சீப்பும்
பட்டுத்துணி நகையும் பார்க்கக் கண்ணாடியும்
சத்துச் சரப்பணி தங்கம்பொன் வெள்ளிநகை
முத்துச் சரப்பணி மோகன மாலைகளும்
திட்டமுள்ள மங்கையர்க்குத் திருப்பூட்டப் போறமென்று
அட்டதிக்கும் தானதிர அடியுமென்றார் பேரிகையை
அருமைப் பெரியவரும் அன்ன நடையாரும் (190)
பெருகும் வளைக்கையால் பேழைமுடி ஏந்திநின்று
இன்னுஞ்சில பெண்கள் இவர்களைச் சூழ்ந்துவரச்
சென்றுஉட் புகுந்தார்கள் திருப்பெண்ணாள் மாளிகையில்
கொண்டுவந்த அணிகலனைக் கோதையர்க்கு முன்வைக்கக்
கண்டுமனம் மகிழ்ந்தார்கள் கன்னியர்கள் எல்லோரும்
நாட்டில்உள்ள சீர்சிறப்பு நாங்கள் கொண்டுவந்தோம்
பூட்டுமென்றார் தோடெடுத்துப் பொன்னவளின் திருக்காதில்
அடைக்காயும் வெற்றிலையும் அன்பாக மடியில்கட்டி
ஆணிப் பொன்னாளை அலங்கரித்துக் குலங்கோதிச்
சாந்துப் பொட்டிட்டுச் சவ்வாது மிகப்பூசி (200)
ஊட்டுமென்றார் நல்லுணவை உடுத்துமென்றார் பட்டாடை
பொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான்படைத்து
அன்பாக வெற்றிலை அடைக்காயும் தான்கொடுத்தார்
தாய்மாமன் தன்னைத் தன்மையுடன் அழைத்து
சந்தனம் மிகப்பூசிச் சரிகைவேட்டி தான்கொடுத்துப்
பொட்டிட்டுப் பொன்முடிந்து பேடை மயிலாட்குப்
பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர் தானறிய
ஆரணங்குப் பெண்ணை அலங்கிருதம் மிகச்செய்து
மாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்து
வலமதாய் வந்து நலமதாய் நின்று (210)
செஞ்சோறு ஐந்துஅடை சிரம்கால் தோளில்வைத்து
நிறைநாழி சுற்றியே நீக்கித் திட்டிகழித்து
அட்டியங்கள் செய்யாமல் அழகு மனைக்குவந்து
மங்கள கலியாண மணவறையை அலங்கரித்து
அத்தியடித் துத்திப்பட்டு அனந்த நாராயணப்பட்டு
பஞ்சவண்ண நிறச்சேலை பவளவண்ணக் கண்டாங்கி
மாந்துளிர்சேர் பூங்கொத்து வண்ணமுள்ள பட்டாடை
மேலான வெள்ளைப்பட்டு மேற்கட்டுங் கட்டிஉள்ள
அருமையுள்ள வாசலிலே அனைவோரும் வந்திறங்கிப்
பொறுமையுள்ள வாசல்தனைப் பூவால் அலங்கரித்துச் (220)
சேரசோழ பாண்டியர்கள் சேர்ந்திருக்கும் வாசலிலே
செம்பொன் மிகுந்தோர்கள் சிறந்திருக்கும் வாசலிலே
வீர இலக்குமி விளங்கிடும் வாசலிலே
விருதுகள் வழங்கிடும் விருப்பமுள்ள வாசலிலே
தரணியில் அன்னக்கொடி தழைத்திருக்கும் வாசலிலே
பன்னீரா யிரம்பேர் பலர்சேர்ந்த வாசலிலே
நாட்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டுப்
பேய்க்கரும்பை நாட்டிப் பிறைமண்ணும் தான்போட்டுச்
சாலுங் கரகமும் சந்திர சூரியரும்
அம்மி வலமாக அரசாணி முன்பாக (230)
ஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாகச்
சுத்தமுடன் கலம்விளக்கிச் சோறரிசி பால்பழமும்
பத்தியுடன் அத்தனையும் பாரித்தார் மணவறையில்
மணவறை அலங்கரித்து மணவாளனை அங்கிருத்தி
அழகுள்ள மணப்பெண்ணை அலங்காரம் பலசெய்து
மாமன் எடுத்து மணவறை சுற்றிவந்து
மகிழ்ச்சியது மீதூற வலதுபுறம் தானிருத்திக்
குலம்பெரிய மன்னவர்கள் குவலயத்தார் சூழ்ந்திருக்க
இராமன் இவரோ! இலக்குமணன் இவரோ!
கண்ணன், இந்திரன், காமன் இவர்தானோ! (240)
கார்முகில் இவரோ! காங்கேயன் இவர்தானோ!
என்றே பாரிலுள்ளார் ஏத்திப் பாராட்ட
அத்தை மகள்தனை அழகுச் செல்வியை
முத்து இரத்தினத்தை முக்காலிமேல் இருத்திக்
கணபதி முன்பாகக் கட்டும்மங் கிலியம்வைத்து
அருமைப் பெரியவர் அன்புடன் வழிபட்டு
மாப்பிள்ளை பெண்ணை மணவறையில் எதிர்நிறுத்திக்
கெட்டிமேளம் சங்குநாதம் கிடுகிடென்று கொட்டியார்ப்ப
மாணிக்க மாங்கல்ய வைடூர்யத் திருப்பூட்டி
மாலைதனை மாற்றி மணவறையில் அமர்ந்தபின்னே (250)
மாப்பிள்ளைக்கு மைத்துனரை வாவெனத் தானழைத்துக்
கலம்பெரிய அரிசிதனில் கைகோர்வை தானுமிட்டுச்
சிங்கார மானபெரும் தெய்வச் சபைதனிலே
கங்காகுலம் விளங்கக் கம்பர்சொன்ன வாழ்த்துரைத்து
மங்கலமும் கன்னிசொல்ல வாத்தியமெலாம் மடக்கி
மறையோர் வேதம்ஓத மற்றவர் ஆசிகூறப்
பிறைஆயிரம் தொழுது பிள்ளையார்க்குப் பூசைசெய்து
அருமைப் பெரியோர் அருகுமணம் செய்தபின்னர்
கைக்குக் கட்டின கங்கணமும் தானவிழ்த்துத்
தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன்கொடுத்து (260)
உரியதோர் பாட்டன் இருவருடை கைதனிலே
தண்ணீர் ஊற்றியே தாரையும் வார்த்தபின்பு
பிரியமுள்ள மணவறையைப் பின்னும் சுற்றிவந்து
செங்கை யினாலே சிகப்பிட்டு இருவருக்கும்
மங்கலக் கலியாணம் வகையாய் முடிந்ததென்று
சாப்பாடு போசனம் சந்தோச மாய்ப்போட
உண்டு பசியாறி உறவுமுறை எல்லோரும்
கொண்டுவந்த பொன்முடிப்பைக் கொடுத்துச் செலுத்துமென்றார்
மண்டலத்தோர் எல்லோரும் மணப்பந்தலில் இருந்து
கலியாணத்தார் தம்மைக் கருத்துடனே அழைத்து (270)
கண்ணாளர் தமையழைத்துப் பொன்னோட்டம் காணுமென்றார்
அப்போது கண்ணாளர் அவ்விடமே தானிருந்து
பணமது பார்த்துக் குணமது ஏற்றுக்
கல்லு வராகன் கருவூர்ப் பணமும்
வெள்ளைப் புள்ளடி வேற்றூர் நாணயம்
சம்மன் கட்டி சாத்தூர் தேவன்
உரிக்காசுப் பணம் உயர்ந்த தேவராயர்
ஆண்மாடை பெண்மாடை அரியதோர் பொற்காசு
ஒருவிழி விழிக்க ஒருவிழி பிதுங்கப்
பலவகை நாணயமும் பாங்காய்த் தெரிந்து (280)
முன்னூறு பொன்முடிப்பு ஒன்றாய் முடிந்தவுடன்
பாட்டன் இருந்து பரியம் செலுத்தினார்
பந்தல் பல்லி பாக்கியம் உரைக்க
மச்சினன் மார்கள் மகிழ்ந்து சூழ்ந்திருக்கச்
சிற்றடிப் பெண்கள் சீர்கள் சுமந்துவரச்
சந்தோ சமாகித் தங்கமுடி மன்னவர்கள்
பந்தச் செலவு பலபேர்க்கும் ஈந்தார்கள்
ஆடுவான் பாடுவான் ஆலாத்தி யுட்பட
நாடிவந்த பேர்களுக்கு நல்ல மனதுடனே
தனிப்பணம் தான்கொடுத்துத் தங்கிஇரும் என்றார் (290)
வாழிப் புலவர்க்கு வரிசைதனைக் கொடுத்துத்
திடமுள்ள பந்தல்கீழ் வந்துநின்ற பேர்களுக்கு
அரிசி அளந்தார்கள் அனைவோரும் தானறிய
கரகம் இறக்கிவைத்துக் கன்னி மணவாளனுக்கும்
புடவைதனைக் கொடுத்துப் பொற்பாய்த் தலைமுழுகிச்
சட்டுவச் சாதம் தளிர்க்கரத்தால் மாப்பிள்ளைக்கு
இல்லத்தாள் பரிமாறி இனிதுண்டு இளைப்பாறிப்
பண்ணை மாதிகனைப் பண்பாகத் தானழைத்து
வில்லை மிதியடிகள் மிகவே தொட்டபின்பு
காலும் விளங்கக் கன்னியைத் தானழைத்து (300)
மஞ்சள் நீராட்டி மறுக்கஇரு அழைப்பழைத்து
மாமன் மார்களுக்கு மகத்தான விருந்துவைத்து
மங்கல சோபனம் வகையாய் முடிந்தவுடன்
மாமன் கொடுக்கும் வரிசைதனைக் கேளீர்
துப்பட்டு சால்வை சோமன் உருமாலை
பஞ்சவண்ணக் கண்டாங்கி பவளநிறப் பட்டாடை
அத்தியடித் துத்திப்பட்டு ஆனையடிக் கண்டாங்கி
இந்திர வண்ணப்பட்டு ஏகாந்த நீலவண்ணம்
முறுக்கு வளையல்களும் முகமுள்ள கொலுசுகளும்
பதக்கம் சரப்பணி பகட்டான காசுமாலை (310)
கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணையும்
வட்டில் செம்பும் வழங்கும் பொருள்களும்
காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும்
குதிரையுடன் பல்லாக்கு குறையாத பலபண்டம்
நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர் தானறிய!
எல்லாச் சீரும் இயல்புடன் கொடுத்து
அடைவுடன் வரிசைபெற்ற அழகு மணவாளன்
மக்கள்பதி னாறும்பெற்று மகிழ்ச்சியாய் வாழ்ந்திருக்க!
வாழி மணமக்கள் வந்தவர்கள் வாழ்த்துரைக்க!
ஆல்போல் தழைதழைத்து, அருகுபோல் வேர்ஊன்றி, (320)
மூங்கில்போல் கிளைகிளைத்து, முசியாமல் வாழ்ந்திருக்க!
வாழ்த்துரை
ஆதி கணேசன் அன்புடன் வாழி!
வெற்றி வேல்கொண்ட வேலவன் வாழி!
எம்பெரு மானின் இணையடி வாழி!
மாது உமையவள் மகிழ்வுடன் வாழி!
திருவுடன் பெருமாள் சேவடி வாழி!
முப்பத்து முக்கோடித் தேவரும் வாழி!
நாற்பத் தெண்ணாயிரம் ரிசிகளும் வாழி!
வேதம் ஓதிடும் வேதியர் வாழி!
பாரத தேசம் பண்புடன் வாழி!
கொங்கு நாட்டுக் குடிகளும் வாழி!
காராள குலதிலகர் கவுண்டர்கள் வாழி!
வேளாள குலதிலகர் வேளாண்மை வாழி!
மாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி!
வாழிய யானும் மகிழ்வுடன் வாழி!
என்குரு கம்பர் இணையடி வாழி!
வையத்து மக்கள் மற்றவரும் வாழி!
வாழி மணமக்கள் வந்தோர் வாழ்த்துரைக்க!
இப்பாட்டுக் கேட்டவர் எல்லோரும் வாழியே!
புலவர் செ இராசு அவர்களின் கொங்கு வேளாளர் சீர்களும்,இலக்கியங்களும் என்னும் நூலிலிருந்து
(தொடரும்)
Subscribe to:
Posts (Atom)
கொங்கு வேளாளர் குலங்கள்
(புலவர் செ.இராசு அவர்களின் நூலிலிருந்து }